ஆ.ரமேஸ்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தை குட்டி உயிரிழந்தமைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் தொழிலாளி ஒருவரை தலவாக்கலை பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) பகல் கைது செய்தனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொழிலாளியை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை இம்மாதம் 12ஆம் திகதி செவ்வாய் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா லங்கான்தினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலவாக்கலை, கட்டுக்கலை தோட்டப்பிரிவில் சிறுத்தைகள் இருப்பதாகவும் இவைகள் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வதாக பலமுறை சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த தோட்டத் தொழிலாளி கூடு ஒன்றை அமைத்து வீட்டுக்கு வெளியில் வைத்துள்ளார்.
இந்த கூட்டுக்குள் (07.03.2024) இரவு வேளையில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி கொண்டுள்ளது.
இவ்வாறு கூட்டுக்குள் சிக்கி கொண்ட சிறுத்தை குட்டி உயிரிழந்த நிலையில் தலவாக்கலை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.
கூடு வைத்து சிறுத்தையை பிடித்த தொழிலாளியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த தலவாக்கலை பொலிஸார் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான், மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
உயிரிழந்த சிறுத்தையை உடல் கூற்று பரிசோதனைக்காக வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.