March 06, 20257:38 AM IST
Tamil Live Breaking News: 4 இடங்களில் சதம் அடித்த வெயில்… இன்று வெயில் எப்படி இருக்கும்?
கோடைக்காலம் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. நேற்று 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருப்பத்தூர் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் , ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதேபோல் சேலத்தில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளது. வரும் 11-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

