SBI Data Leak: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உடனே பாஸ்வேர்டு, பின் நம்பரை மாற்ற வேண்டுமா?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் தளத்தில் கசிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் களவு போயுள்ளதா என அச்சமடைந்துள்ளனர்.
எஸ்பிஐ, டார்க் வெப்பில் சுமார் 3.75 லட்சம் பதிவுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு நடத்தியதில், தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய 3,897 வாடிக்கையாளர் பதிவுகளை அடையாளம் கண்டுள்ளது. இதில் பெயர், பாலினம், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரி, கிளை மற்றும் CIF அடையாள எண், கடன் பதிவுகள் தொடர்பான மெட்டாடேட்டா ஆகியவை அடங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் வங்கி செயல்பாடுகளோ, நிதி செயல்திறனோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் முக்கிய வணிக செயல்பாடுகள் வழக்கம்போல எந்தவித தடையுமின்றி இயங்கி வருவதாக எஸ்பிஐ கூறியுள்ளது. இருந்தாலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகின்றனர்.
ஏனெனில் யாருடைய தகவல்கள் கசிந்துள்ளன என்பது தெரியவில்லை ஆனால் சில அடிப்படை தகவல்கள் கசிந்துள்ளன என்பதால் இந்த கசிந்த தகவல்களை கொண்டு மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நம்பகமானவர்கள் போல் பேச வாய்ப்புள்ளது. உதாரணமாக, வாடிக்கையாளரின் பெயர், எண், முகவரி அல்லது கடன் விவரங்களை அறிந்திருப்பவர் போல பேசி வங்கி ஊழியர் என கூறி ஏமாற்ற முயற்சி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே போனில் அழைத்து வங்கி அதிகாரி என கூறி வாடிக்கையாளரின் விவரங்களை ஒருவர் கூறுகிறார் என்பதற்காக அவர் உண்மையான வங்கி பிரதிநிதி என்று நம்பிவிடக் கூடாது. உங்களின் ஓடிபி உள்ளிட்ட தகவல்களை எல்லாம் பகிர கூடாது.
இதனால் வாடிக்கையாளர்கள் யாரும் பீதியடைய தேவையில்லை மேலும் கணக்குகளை உடனே மூட வேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், வங்கி தொடர்பான எதிர்பாராத அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
போனில் அழைப்பவர் எஸ்பிஐ அல்லது வேறு எந்த நிதி நிறுவனத்திலிருந்தும் பேசுவதாக கூறினாலும் ஓடிபி, ஏடிஎம் பின் என எதையும் யாருக்கும் சொல்லாதீர்கள். எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் அலெர்டுகளை வைத்து, வங்கி கணக்கின் செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும், உங்களுக்கு தெரியாத பரிவர்த்தனைகள் இருந்தால் உடனடியாக புகாரளியுங்கள்.
தகவல்கள் கசிந்துள்ளதே தவிர வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடையலாம். ஆனால் இனி வரும் நாட்களில் வங்கி சார்ந்த போன் அழைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். நீண்டகாலமாக ஒரே பாஸ்வேர்டு, பின் நம்பர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோர் அவற்றை மாற்றி வைப்பது ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

