சிவாஜிநகர் : சிவாஜிநகர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கின் முக்கிய புள்ளியான, எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் ஹெப்பால் தொகுதி தலைவர் முகமது கவுஸ் நியாஜ், கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் பதுங்கி இருந்தபோது, கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு சிவாஜிநகரை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ருத்ரேஷ். ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு முடிந்த பின், 2016 அக்டோபர் 16ம் தேதி, மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடாகாவை உலுக்கியது.
கொலை சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ.,
விசாரணையில், தற்போது தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த நான்கு பேர், ருத்ரேஷை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. அந்த நால்வரும், அவர்களை துாண்டிவிட்ட ஆசிம் ஷெரிப் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், முக்கிய புள்ளியான, முகமது கவுஸ் நியாஜ், என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இவர், பெங்களூரு ஹெப்பால் சட்டசபை தொகுதியின் எஸ்.டி.பி.ஐ., அமைப்பின் தலைவர் ஆவார். இவர் தொடர்பான உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வெகுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரது செயல்பாடுகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதற்கிடையில், கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் பதுங்கி இருப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது.
அனைவரும் கைது
அதன் அடிப்படையில், இந்திய துாதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அந்நாட்டுடன் தொடர்பு கொண்டு, அவர் பதுங்கிய இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு, முறைப்படி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். விமானம் மூலம் நேற்று மும்பை வந்திறங்கியதும், என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து என்.ஐ.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
முகமது கவுஸ் நியாஜ், ஆசிம் ஷெரிப் ஆகியோர் நடத்திய ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ருத்ரேஷ் கொலை நடந்துள்ளது என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சமூகத்தில் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். இதற்காக, நான்கு பேரை கொலை செய்ய துாண்டினர். கொலையாளிகள், ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிரான போராட்டத்தை புனிதப் போர் என்று நம்புகின்றனர்.
கவுஸ் கைது செய்யப்பட்டதையடுத்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்