Last Updated:
சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் 2026 தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, கொல்கத்தாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 28 பந்துகளில் 46 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்களும் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 8.4 ஓவர்களில் 81/0 என வலுவாக இருந்த ராஜஸ்தான், வருண் சக்கரவர்த்தியின் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்தது. வருண் 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே வழங்கி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்குத் துணையாக கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் டிம் சீஃபர்ட் மற்றும் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவருமே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் வந்த கேமரூன் கிரீன் 27 ரன்களும், ரோவ்மன் பவல் 23 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி 85 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் அனுகுல் ராய் அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குப் பக்கபலமாக இருந்த அனுகுல் ராய் 16 பந்துகளில் 29 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.
இறுதியில் 19.4 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சொந்த மண்ணில் பெற்ற இந்த வெற்றி கேகேஆர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


