Last Updated:
வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களின் கல்வி, குற்றப் பின்னணி, சொத்து, கடன் விவரங்களை எளிதில் அறிய இந்திய தேர்தல் ஆணையம் ECINet தளத்தில் KYC என்பதை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது. மறுபக்கம் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்கள் இறுதி கட்ட பிரச்சாரங்களில் மும்முரமாக இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், வேட்பாளர்களின் கல்வித் தகுதிகள், குற்றப் பின்னணிகள் உள்ளிட்டவற்றை எளிதில் வாக்காளர்கள் அறிந்துகொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தளத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களின் கல்வித் தகுதி, குற்றப் பின்னணி உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துகள் மற்றும் கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் பற்றிய தகவல்களை பெற குடிமக்கள் ECINet-ன் ‘உங்கள் வேட்பாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) தொகுதியை பயன்படுத்தலாம்.
பயனர்கள் ECINet-ன் ‘தேர்தல் நடத்தை (Conduct of Elections)’ பகுதியின் கீழ் KYC தொகுதியை அணுகலாம். வேட்பாளர்கள் சமர்ப்பித்த முழுமையான உறுதிமொழிப் பத்திரத்தையும் (படிவம் 26) அவர்கள் ECINet மூலம் பதிவிறக்கம் செய்யலாம். ECINet என்பது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே தடையற்ற தளத்தில் ஒருங்கிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவை தளமாகும். இது இந்திய தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது.
ECINet வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல், உங்கள் விண்ணப்பங்களை கண்காணித்தல், தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுதல், வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் அழைப்பை முன்பதிவு செய்தல், எப்பிக் பதிவிறக்கம், வாக்குப்பதிவு போக்குகள் மற்றும் குறைகளை தீர்ப்பது போன்ற சேவைகளை ஒரே பாதுகாப்பான தளத்தில் வழங்குகிறது.
இது நிகழ்நேர தகவல் அணுகல் மற்றும் புகார் தீர்வுக்கான ஒற்றைச் சாளர தளத்தையும் வழங்குகிறது. இதில் விதிமீறல்களை புகாரளிக்க சி-விஜில் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகக்கூடிய தேர்தல் சேவைகளை உறுதி செய்ய Saksham போன்ற கருவிகளும் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்க வேட்பாளரின் கல்வித் தகுதி.. குற்றப் பின்னணி என்ன? எளிதாக அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு


