தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 10ஆம் தேதி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் எனும் சாதனையை கடந்து 4,399 நாட்கள் பிரதமராக இருந்த இந்தியாவின் நீண்ட பிரதமர் எனும் சாதனையை படைக்கப்போகிறார். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறையில் பிரதமர் மோடி நிகழ்த்திய சாதனை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
‘சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை எப்போதும் தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்பது எப்போதும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான மைய அம்சம். அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு, ‘அணி சேராமை’ (Non – Alignment) என்ற கொள்கையை பின்பற்றினார். அதாவது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டமைப்பிலோ அல்லது சோவியத் யூனியன் தலைமையிலான கம்யூனிச கூட்டமைப்பிலோ முறையாக இணைவதை அவர் தவிர்த்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதே கொள்கையை வேறொரு வடிவத்துக்கு மாற்றியது. இந்தியா இன்று கூட்டணிகளிலிருந்து விலகி இருப்பது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் பல அதிகார மையங்களுடனும் இணைந்து செயல்படுகிறது. நேருவின் ‘அணி சேரா கொள்கை’ vs மோடியின் ‘பல அணி சார்’ கொள்கையில் நிகழ்ந்த மாற்றம், உலக அளவில் இந்தியாவின் பங்கு எப்படி மாறியுள்ளது என்பதை புரிந்துகொள்வதற்கான வழியாக அமைந்துள்ளது.
நேருவின் ‘அணி சேரா’ கொள்கை என்றால் என்ன? – இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்த காலத்தில் உலகம் பனிப்போருக்குள் அடியெடுத்து வைத்தது. அதாவது அமெரிக்கா – சோவியத் யூனியன் இரண்டு வல்லரசு நாடுகளும் போட்டி நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்டன. அதனால் உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகள் ஒன்று அமெரிக்காவுடன் இணைய வேண்டும் அல்லது சோவியத் யூனியனுடன் இணைய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.
இந்த சூழலில் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரிவு, வறுமை, உணவு பற்றாக்குறை, தேசத்தை கட்டமைப்பது, நாட்டின் வளர்ச்சி என பல சவால்கள் இருந்தன. அதனால் எந்த ஒரு அணியிலும் இணைவது அபாயகரமான ஒன்றாக கருதப்பட்டது.
அப்போது தான் ‘அணி சேரா’ வெளியுறவுக் கொள்கையை அறிவித்தார் பிரதமர் நேரு. உலகில் நடக்கும் பிரச்சினைகளை இந்தியா கண்டும் காணாமல் இருக்கும் என்றோ, எப்போதும் நடுநிலைமை வகிக்கும் என்றோ அதற்கு அர்த்தம் இல்லை. மாறாக, எந்த ஒரு உலக ராணுவ கூட்டமைப்புடன் இந்தியா அணி சேராது என்பதும், உலக விவகாரங்களை இந்தியா தனது நாட்டின் நலன் சார்ந்து முடிவெடுக்கும் என்பது தான் அதன் அர்த்தம்.
பிரதமர் மோடியின் ‘பல அணி சார்’ கொள்கை என்றால் என்ன? – இப்போது இருக்கும் புவி சார் அரசியல் என்பது முற்றிலும் மாறுபட்டது. பனிப்போர் முடிந்து தற்போது சோவியத் யூனியன் இல்லை. இந்தியாவுக்கு சவாலாக சீனா உருவெடுத்துள்ளது. உலக அரசியல் பன்முகத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது.
இப்படியான நிலையில், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை ‘அணி சேரா’ என்பதிலிருந்து ‘பல அணி சார்’ என்ற கொள்கைக்கு மாற்றம் பெற்றுள்ளது. ஒரே நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல், ஒரே நேரத்தில் பல நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொள்வது இந்தியாவுக்கு நன்மை பயக்கும் விஷயமாக மாறியிருக்கிறது. நாடுகளுக்குள் பதற்றம் நிலவினாலும், மற்றொரு நாட்டுடன் நல் உறவு நீடிக்கும்.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் ‘குவாட்’ அமைப்பில் அங்கம் வகிப்பது உடன், ரஷ்யா உடன் நல் உறவை இந்தியா பேணி வருகிறது. மறுபுறம் வளைகுடா நாடுகளுடனான உறவில் இந்தியா இணக்கமாக உள்ளது. அதே நேரம் ஐரோப்பாவுடனான உறவும் விரிவடைந்து வருகிறது. உலகளாவிய அளவில் தெற்கின் குரலாகத் தன்னை முன்னிறுத்தும் இந்தியா, பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற தளங்களில் தொடர்ந்து பங்கேற்கிறது.
இதன் மூலம் உலக அளவில் எந்தவொரு அதிகார மையத்தையும் சார்ந்திருப்பதை இந்தியா தவிர்த்து வருகிறது. அதிலிருந்து விலகி, பலதரப்பட்ட கூட்டாண்மையில் இணைந்து பயனடைவதே பிரதமர் மோடி அரசின் அணுகுமுறை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இது மாற்றத்தை விதைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

