Oracle: மீண்டும் பணிநீக்கம்.. டெக் ஊழியர்களை அலறவிட்ட ரிப்போர்ட்..!
உலகின் முன்னணி டெக் நிறுவனமான ஆரக்கிள் கடந்த ஒரு வருடமாக ஏஐ கட்டமைப்புகளை உருவாக்க பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து வரும் வேளையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளை குறைத்து முதலீடு செய்து வருகிறது. இதற்காக ஏப்ரல் மாதம் மட்டும் உலகம் முழுவதும் மொத்தம் 21,000 பேருக்கு மேல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் இந்தியாவில் மட்டும் 12000 ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழந்து பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் ஆரக்கிள் மீண்டும் பெரிய அளவிலான பணிநீக்கத்தை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஸ்னஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் ஆரக்கிள் நிர்வாகம் இந்த முறை சில அணிகளில் 2 இலக்க அளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டு வருகிறது. ஜூன் மாத தரவுகள் படி ஆரக்கிள் நிறுவனத்தில் உலகளவில் சுமார் 1,41,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் எத்தனை பேர் தங்களுடைய வேலையை இழக்கப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.
ஆரக்கிள் நிர்வாகம் ஏற்கனவே ஒவ்வொரு மேனேஜர்களிடம் யாரெல்லாம் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்பதை கேட்க துவங்கியுள்ளதால், வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பணிநீக்க அறிவிப்பை ஊழியர்களுக்கு வெளியிட வாய்ப்புள்ளது.
ஆரக்கிள் மே மாத பணிநீக்கத்தில் 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது 10 சதவீத ஊழியர்களை டார்கெட் செய்தால் குறைந்தது 14000 பேர் தங்களுடைய வேலையை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆராக்கிள் தற்போது OpenAI, Meta, Nvidia மற்றும் xAI போன்ற AI நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பெரிய பெரிய டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறது. இதற்காக 2026ஆம் ஆண்டில் மட்டும் ஆரக்கிள் நிறுவனம் சுமார் 50 பில்லியன் டாலர் வரையில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இப்படி திரட்டப்படும் முதலீடுகளை ஏஐ சிப்களை வாங்கவும், டேட்டா சென்டர் அமைக்கவும் பயன்படுத்த உள்ளது. ஏஐ சேவையின் தேவை தற்போது மிதமான வேகத்தில் உயர்ந்தாலும், தொடர்ந்து உயர்ந்து வருவது இதற்கான டிமாண்ட் வலிமையை காட்டுகிறது.
இந்த நிலையில் வருமானம், முதலீடு, கடன், செலவுகள், லாபம் என அனைத்தையும் கணக்கிட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நிதியியல் முடிவுகளை வெளியிடுவதற்காக இப்பணிநீக்க திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
2026ல் மட்டும் ஆரக்கிள் சுமார் 55.7 பில்லியன் டாலர் தொகையை புதிய டேட்டா சென்டருக்காக முதலீடு செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் மொத்த Cash Flow அளவான 23.7 பில்லியன் டாலரை காட்டிலும் அதிகமாகும். இந்த அதீத செலவுகளை சமாளிக்க அந்த ஆண்டு 43 பில்லியன் டாலர் கடனாகவும், 5 பில்லியன் டாலர் பங்கு விற்பனை வாயிலாக திரட்டியுள்ளது.

