இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான பேரன்பை வெளிப்படுத்தும் வகையில், 6வது மாபெரும் மௌலிதுர் ரஸூல் மாநாட்டின் நாடு தழுவிய அறிமுக விழா, அண்மையில் மலேசியா முழுவதும் ஒரே நேரத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் ஆன்மீக எழுச்சியுடனும் நடைபெற்றது.
அண்ணல் நபி முகம்மது (ஸல்) அவர்களின் மீது அன்பை வெளிப்படுத்தும் ஸலவாத் ஓசைகள் நாடு முழுவதும் ஒலித்தன. ஒவ்வொரு ஸலவாத் முழக்கமும், நபி நேசத்தைப் பரப்பும் ஒவ்வொரு முயற்சியும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மலேசிய நாட்டிற்கும் உலக முஸ்லிம் உம்மத்திற்கும் நன்மை, ஒற்றுமை மற்றும் அருளாசியாக அமைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
மலேசியாவின் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுக நிகழ்வில், உலமாக்கள், நன்கொடையாளர்கள், மலேசியா இந்திய முஸ்லீம் சங்கங்கள் , பள்ளிவாசல்கள், சுராக்கள், மத்ரஸாக்கள் போன்ற அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மௌலிதுர் ரஸூல் மாநாட்டை வரவேற்கும் பதாதைகளை வெளியிட்டு, நபி நேசத்தின் செய்தியை பரப்பினர்.


இந்த அறிமுக விழாவின் பிரதான நிகழ்வு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நடைபெற்றது. இந்த அறிமுக விழாவில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய பெர்மிம் தேசியத் தலைவரும், மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான முஹம்மது அஸ்மான் ஷாஹ், இந்த 6வது மாபெரும் மௌலிதுர் ரஸூல் மாநாடு அக்டோபர் 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, தலைநகர் கோலாலம்பூரிலுள்ள மாத்ரேட் மாநாட்டு மையத்தில் (MATRADE Exhibition & Convention Centre) பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாடு பெர்மிம் என்று அழைக்கக்கூடிய மலேசிய இந்திய முஸ்லீம் தேசிய பேரவை, இமிம் மற்றும் ப்ரெஸ்மா என்று அழைக்கக்கூடிய மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள இந்திய முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்கள், சுராக்கள், மத்ரஸாக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இந்த மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள நாடு முழுவதிலுமிருந்து அறிஞர்கள், சமூகத் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அஸ்மான் ஷாஹ் தெரிவித்தார்.



