

கோலாலம்பூர் :
லே டூர் டி லங்காவி (Le Tour de Langkawi 2026) சைக்கிள் ஓட்டும் பந்தயத்தின் தொடக்கக் கட்டத்தை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாமில் உள்ள பல சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பந்தயம் காலை 11.00 மணிக்கு புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள ‘ராடியா அரேனா’ (Radia Arena), பெர்சியாரான் தெபார் லயாரிலிருந்து தொடங்குவதாக ஷா ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் சாருடின் சமா கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணி முதல் சாலைகள் முழுமையாக மூடப்படும் என்றும், சைக்கிள் ஓட்டும் பந்தய அணி கடந்து சென்றதும், ஒரு மணி நேரத்திற்குள் சாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பந்தயத்தின்பெர்சியாரான் கெர்பாங் உத்தாமா (Persiaran Gerbang Utama),
ஜாலான் பசார் U8/101 (Jalan Bazar U8/101),
பெர்சியாரான் பலாய்ரூங் ரவுண்டானா (Persiaran Balairung Roundabout),
பெர்சியாரான் மிம்பார் (Persiaran Mimbar),
ஜாலான் செரம்பி U8/21, ஜாலான் உபின் U8/19, ஜாலான் பிராய் U8/54, ஜாலான் லேலாங்கிட் U8/45 ஆகிய சாலைகள் மூடப்படும்.
மேலும் கத்ரி நெடுஞ்சாலை (Guthrie Corridor Expressway), ஜாலான் சுங்கை பூலோ, பெர்சியாரான் மொக்தார் தகாரி, டேஷ் நெடுஞ்சாலை (Dash Expressway), சன்வே காயாங்கான், சகாயா SPK, அலாம் புதிமான், கிரீன்ஹில்ஸ், ஜாலான் பைப்ப் (Jalan Paip), ஜாலான் புக்கிட் செராகா மற்றும் ஷா ஆலாம் – வடக்கு கிள்ளான் எல்லை வரை உள்ள சாலைகளும் மூடப்படும் என அவர் சொன்னார்.
எனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணத் தாமதங்களைத் தவிர்க்க, அவசியமான வேலைகள் இல்லாத பட்சத்தில் இந்தப் பகுதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனமாக வாகனங்களை இயக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


