பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கும் 40% மக்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
பண நெருக்கடி இருக்கும்போது கடன் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஏற்கனவே வாங்கிய கடனைக் கட்ட புதிதாக கடன் வாங்குவது தான் பிரச்சனை. அப்படித்தான் சமீப காலமாக முன்பு வாங்கிய கடனை அடைக்க மீண்டும் மீண்டும் மக்கள் கடன் வாங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு கடன் பெறுவது எளிதான வழி என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையிலேயே இந்த ஒரு வழக்கம் தான் உங்களை தீராத கடன் சுமையில் சிக்க வைக்கும்.
கடன் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிடும் எக்ஸ்பர்ட் பேனல் என்ற தளம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கடன் பெற்ற சுமார் 40 சதவீதத்தினர் ஏற்கனவே பெற்ற கடன்களின் EMI-ஐ செலுத்த முடியாமல் புதிதாக கடன் வாங்குவதாக தெரிவித்துள்ளது. அதேபோல ஏற்கனவே பெற்ற கடனை அடைக்க சிலர் கிரெடிட் கார்டு பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 60 சதவீதத்தினரின் ஈஎம்ஐ அவர்களுடைய மாதாந்திர வருமானத்திற்கு சமமாக இருப்பதாகவும், சிலருடைய ஈஎம்ஐ வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
எக்ஸ்பர்ட் பேனல் தளத்தில் கடன் தொடர்பாக என்குயரி செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தான் இந்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடன் வாங்கியவர்களில் 26 சதவீதத்தினர் அவசர மருத்துவச் செலவுகளுக்காக கடன் பெற்றுள்ளனர். 22 சதவீதத்தினர் திருமணம், உயர்கல்வி, குடும்பச் செலவுகள் மற்றும் தனிப்பட்ட செலவுக்காக கடன் வாங்கியுள்ளனர்.
தொழில் நஷ்டம் மற்றும் வேலை இழப்பு போன்ற பிரச்சனைகளுக்காக 18 சதவீதத்தினர் கடன் பெற்றுள்ளனர். 15 சதவீதத்தினர் அன்றாட செலவுகளை கையாள முடியாமல் கடன் வாங்கியுள்ளனர்.
ஒரு சிலர் ஹோம் லோன், பர்சனல் லோன் போன்ற லோன்களை வாங்கி விடுகின்றனர். அதற்காக EMI செலுத்திக் கொண்டிருக்கும் பொது எதிர்பாராத விதமாக மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு அல்லது பிற தேவைகள் ஏற்படும் போது இன்னொரு கடன் அல்லது கிரெடிட் கார்டு பெறுகின்றனர்.
இது போன்ற வழக்கம் அவ்வப்போது உதவிகரமானதாக இருக்கலாம். ஆனால் மீண்டும் நீங்கள் இன்னொரு ஈஎம்ஐ கட்ட வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உதாரணமாக இந்த மாதம் நீங்கள் செலுத்த வேண்டிய ஈஎம்ஐ பாக்கி இருக்கிறது. அதை செலுத்துவதற்காக வேறொரு கடன் வாங்குகிறீர்கள் அல்லது கிரெடிட் கார்டு வாங்குகிறீர்கள் என்றால்.. மறு மாதம் ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் ஈஎம்ஐ-யும், புதிய கடனுக்கான ஈஎம்ஐ-யும் சேர்த்து செலுத்த வேண்டும்.
ஒரு கடனைப் பெற்று மீண்டும் திருப்பி செலுத்துவதே பிரச்சனை தான். இதில் சில கடன் பெற்றவர்கள் இன்னும் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் என்பதும் எக்ஸ்பர்ட் பேனல் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
கடன் பெற்ற 39 சதவீதத்தினருக்கு ஏஜென்ட்கள் அழைப்பு விடுத்து தரகுறைவான வார்த்தைகள் பேசி பணத்தை வசூல் செய்கின்றனர். 28 சதவீத கடன் பெற்றவருக்கு மீண்டும் மீண்டும் கடன் பெற நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அதேபோல 11 சதவீத கடன் பெற்றவரின் வீடுகளுக்கு வசூல் ஏஜெண்டுகள் நேரில் சென்று தொல்லை தருகின்றனர். இதில் 8 சதவீதத்தினர் பணத்தை திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த ஒரு வழக்கத்தினால் தான் இன்ஸ்டன்ட் லோன் ஆப்களில் சிக்கி சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடனை அடைக்க முடியாத பட்சத்தில் 5 நிமிடங்களில் லோன் கிடைப்பதால் உண்மையிலேயே அந்த ஆப் ஆர்பிஐ அங்கீகாரம் பெற்றதா என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் அவசர அவசரமாக லோன் பெறுகின்றனர்.
பின்னர் லோன் பெற்றவரின் புகைப்படத்தையே தவறாக சித்தரித்து அவருடைய குடும்பத்திற்கு அனுப்பி சித்திரவதை செய்து கடனை வசூலிக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் சில காலமாக தொடர்கதை ஆகி வருகிறது. அரசு இதைத் தடுக்க எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருந்தாலும் கடன் பெறுபவர்களின் தரப்பிலும் விழிப்புணர்வு தேவை. ஒரு சில ஆப்-கள் 100 முதல் 200 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வசூலிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, எனவே ஒரு கடனுக்காக மற்றொரு கடனை பெறும்போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். இது ஒரு தற்காலிக தீர்வாக தோன்றலாம். ஆனால் இதுவே வழக்கமாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்தக் கடனையும் நீங்கள் தான் சேர்த்து செலுத்த வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

