LPG சிலிண்டர் புக்கிங்.. வந்தது புது ரூல்ஸ்.. அக்டோபர் 1ம் தேதிக்குள் புது சிலிண்டர் புக் செய்திடுங்க!
மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் ரேஷன் கார்டு, மானிய விலை பொருட்கள், எல்பிஜி சிலிண்டர் என பலதரப்பட்ட சேவைகள் சரியான நபர்களுக்குத் தான் செல்கிறதா அல்லது போலியாக கணக்கு காட்டி மோசடி செய்யப்படுகிறதா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வரும் வேளையில், இதற்காக KYC, ஆதார் மூலம் சரி பார்ப்பு பணிகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் புக்கிங் சேவைக்கு புதிய விதிமுறை மாற்றம் வந்துள்ளது.
அதாவது வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பின் உரிமையாளர்கள் யாரெல்லாம் பியோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷன் முறையைச் செய்ய வில்லையோ அவர்கள் உடனடியாக செய்தாக வேண்டும்.

இல்லையெனில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புக் செய்யப்படும் கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தேசிய எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சிலிண்டர் இணைப்பை ஆதார் மூலம் சரிபார்ப்பு செய்த 27.43 கோடி வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை, விதி மாற்றமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் இருக்கும் மொத்த சிலிண்டர் இணைப்பில் 89.9 சதவீதம் பேர் ஆதார் மூலம் சரிபார்ப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பியோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷன் முறையின் கீழ் வெரிபிகேஷன் செய்யாதவர்கள் தொடர்ந்து புக் செய்து சிலிண்டர் பெறும் வசதி இருந்தாலும் அவர்கள் மானிய விலையில் அல்லாமல் கூடுதல் கட்டணத்தை செலுத்தி சிலிண்டர் வாங்க வேண்டியிருக்கும் என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
பியோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷன் முறையின் அடிப்படை நோக்கமே அரசு அளிக்கும் மானியம் சரியான நபர்களுக்கு செல்கிறதா என்பதை உறுதி செய்வதே ஆகும். மேலும் இதை ஒவ்வொரு கேஸ் இணைப்புதாரரும், சிலிண்டர் டெலிவரி செய்யும் போது செய்ய முடியும், அல்லது கேஸ் ஏஜெண்சி வாயிலாகவும் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் வீட்டில் இருந்து செய்யவும் தனி ஆப் ஒவ்வொரு நிறுவனத்தாலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இன்டேன் கேஸ் இணைப்பு உரிமையாளர்கள் இந்தியன்ஆயில் ஓன், பாரத்கேஸ் ஹலோBPCL, ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP PAY போன்ற செயலியை பியோமெட்ரிக் ஆதார் ஆதென்டிகேஷனுக்காக பயன்படுத்தலாம்.
