கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) நடந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தின் காணொளி இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பான போலீஸ் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, இன்று சட்டத்துறைத் தலைவரின் (AGC) அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி KLIA-இல் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் (AKPS) தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையின், நபர் ஒருவரைக் கண்டித்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“இந்தக் காணொளி எவ்வாறு இணையத்தில் கசிந்தது, அதன் மூல ஆதாரம் என்ன மற்றும் அது எவ்வாறு பரப்பப்பட்டது என்பது குறித்துப் போலிஸ் துறை ஆழமாக விசாரித்து வருகிறது. உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரவுவதைத் தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
KLIA மற்றும் KLIA2 ஆகிய முனைங்களில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், காணொளி அங்கிருந்து கசிந்ததா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட வழிகளில் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து போலிஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, KLIA -வின் முக்கிய கண்காணிப்பு அறைக்கு AKPS அதிகாரிகள் அணுகல் பெறுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாகச் செய்யப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு குறைபாடுள்ள பகுதிகளில் கூடுதல் CCTV கேமராக்கள் உடனடியாகப் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் சைஃபுடின் உறுதியளித்தார்.



