
இலங்கைக்கு எதிரான T20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சாஹிப்ஸாதா பர்ஹான் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தலைவராக ஷஹீன் அப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சாஹிப்ஸாதா பர்ஹான் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய சல்மான் அகாவிடமிருந்து பர்ஹான் இந்த தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாத்தில் சல்மான் அகாவுக்கு இடம் வழங்கப்படவில்லை.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் 383 ஓட்டங்களைக் குவித்து பாகிஸ்தான் சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்ட வீரரான 30 வயதுடைய பர்ஹான், கடந்த வாரம் நிறைவுக்கு வந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கும் தலைமை தாங்கினார்.
இவருடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்ற அப்துல் சமட், சயீம் அய்யூப், ஹசன் நவாஸ், அராபத் மின்ஹாஸ், மாஸ் சதாகட், அப்ரார் அஹமட், சுபியான் மொக்கீம் மற்றும் மொஹமட் சல்மான் மிர்ஷா ஆகியோரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள T20 குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான T20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சாஹிப்ஸாதா பர்ஹான் தலைமை வகிக்க, அப்துல் சமட், அப்ரார் அஹமட், அராபத் மின்ஹாஸ், பக்கார் சமான், ஹசன் நவாஸ், விக்கெட் காப்பாளர் கவாஜா நபே, மாஸ் சதாகட், மொஹமட் சல்மான் மிர்ஷா, மொஹமட் இம்ரான், நசீம் ஷாஹ், ரசாவுல்லா, சயீம் அய்யூப், ஷதாப் கான் மற்றும் சுபியான் மொக்கீம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் T20 தொடரைத் தொடர்ந்து இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சாஹிப்ஸாதா பர்ஹான் சேர்க்கப்படவில்லை. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷாஹ் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றிய அணியில் இடம்பிடித்திருந்த அப்துல் சமட், ரொஹைல் நசீர், ஷமீல் குசைன், மாஸ் சதாகட் மற்றும் அஹ்மட் டேனியல் ஆகியோர் இம்முறை ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பக்கார் சமான், பஹீம் அஷ்ரப், ரசாவுல்லா, சாத் பயிக், சயீம் அய்யூப் ஆகியோருடன் ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 96 ஓட்டங்கள் விளாசிய ஹசன் நவாஸும் ஒருநாள் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் இறுதிப் போட்டி ஒக்டோபர் 31ஆம் திகதி லாகூரின் கடாபி மைதானத்தில் அரங்கேறவுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் ஷஹீன் அப்ரிடி தலைமையில் அப்ரார் அஹமட், அராபத் மின்ஹாஸ், பாபர் அசாம், பாஹீம் அஷ்ரப், பக்கார் சமான், ஹரிஸ் ரவூப், ஹசன் நவாஸ், விக்கெட் காப்பாளர் மொஹமட் காஸ்ஸிகோரி, நசீம் ஷாஹ், ரசாவுல்லா, சாத் பயிக், சயீம் அய்யூப், சல்மான் அகா, ஷதாப் கான் மற்றும் சுபியான் மொக்கீம் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

