கோலாலம்பூர்:
கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தின் (KKIA) ஓடுபாதை, அவசரப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (MAHB) இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விமானிகளுக்குத் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பான ‘NOTAM’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தனது முகநூல் பக்கத்தில் MAHB வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“விமான நிலைய ஓடுபாதையின் பாதுகாப்பு மற்றும் தரப் பரிசோதனைகள் நிறைவடைந்து, துப்புரவுப் பணிகள் முடிந்த பின்னரே ஓடுபாதை மீண்டும் செயல்பாட்டிற்குத் திறக்கப்படும்.” என்று, மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (MAHB) தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக மூடலால் விமானச் சேவைகளின் நேரங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள் அனைவரும் தங்களின் பயணங்களை உறுதி செய்யும் பொருட்டுச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு நேரலை விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இருப்பினும், இந்தச் சீரமைப்புப் பணிகள் எத்தகைய தன்மை கொண்டவை அல்லது ஓடுபாதை எவ்வளவு நேரம் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த துல்லியமான விவரங்களை MAHB தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.



