Last Updated:
கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இடது சாரி கூட்டணியின் தோல்விக்கான காரணம் என்ன? என்பன குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது.
பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேநேரம் 2016ஆம் ஆண்டுக்கு பின் கேரளாவில் மீண்டும் எம்எல்ஏ கணக்கை தொடங்கிய பாஜக, இம்முறை நேமம், சாத்தனூர், கலகோட்டம் ஆகிய 3 தொகுதிகளை கைப்பற்றியது.
பினராயி விஜயன்
பினராயி விஜயன் தலைமையிலான அரசின் மீது மக்களிடையே இருந்த அதிருப்தி, வாரிசு அரசியல், வேலையின்மை உள்ளிட்ட காரணங்களே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கைப்பற்றியதும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெருவாரியான இடங்களை வெல்ல முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.
மேலும் சசி தரூர் போன்றோரால் காங்கிரஸ் வெற்றிக்கு பாதகமான சூழல் நிலவியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சசி தரூரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் பிரசார குழு ஒருங்கிணைப்பாளராக சசி தரூர் நியமிக்கப்பட்டார். இதுவும் கூட காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி
குஜராத் காங்கிரசை சேர்ந்த மதுசூதன் மிஸ்திரியின் நேர்த்தியான வேட்பாளர் தேர்வு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காதது உள்ளிட்ட காரணங்களும் காங்கிரஸின் வெற்றிக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்து பினராயி விஜயன் அரசின் மீது இருந்த அதிருப்தி, கடந்த 10 ஆண்டுகளாக போதிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, வாரிசு அரசியல் உள்ளிட்டவையும் இடதுசாரி கூட்டணிக்கு பாதகமாகவும், காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது.
மத்திய கேரளாவில் உள்ள திருச்சூர், பத்தினம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட தொகுதிகளில் கிறிஸ்தவ வாக்குகளை பெருவாரியாக கைப்பற்றியதும் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. இதுபோல, தொகுதிகளில் நிலவும் பிரச்சினை மற்றும் கள நிலவரத்திற்கேற்ப வேட்பாளர்களை களமிறக்கி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.


