தொடக்க நிலை பொது பங்கு வெளியீடு நிறைவடைந்த நிலையில், ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவன பங்குகள் இன்று பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன. ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவனம் முதல்முறையாக பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. ஒரு பங்குக்கு 1,119 ரூபாய் என்ற விலையில் 30,213 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது.
இதற்கான முன்பதிவில், திட்டமிட்டதில் 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்துசேர்ந்தன. இதனைத் தொடர்ந்து, பங்குகள் ஒதுக்கீட்டுப் பணிகள் நேற்று இறுதிசெய்யப்பட்டன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜியோ ஃபிளாட்பார்ம் நிறுவன பங்குகள் இன்று காலை 10 மணிக்கு பட்டியலிடப்பட்டன. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முன்னிலையில் மணி அடித்து ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனந்த் அம்பானி டிஜிட்டல் இந்தியாவுக்கு ஜியோவின் பங்கு முக்கியமானது என பெருமிதம் தெரிவித்தார். விழாவில் பேசிய அனந்த் அம்பானி, தனது தாத்தா தீருபாய் அம்பானி சந்தித்த சவால்களையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியையும் நினைவு கூர்ந்தபோது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கண்கலங்கினார்.
அனந்த் அம்பானி பேசும்போது, “இன்று மிக முக்கியமான ஒரு வார்த்தையுடன் எனது உரையைத் தொடங்குகிறேன். அது நன்றி. ஜியோவை நம்பி இந்த நாளை சாத்தியமாக்கிய லட்சக்கணக்கான மக்களுக்கு என் நன்றிகள். இன்று பங்குச் சந்தையில் ஒலிக்கும் மணி, எனக்கு ஒரு கோயிலின் மணியைப் போல ஒலிக்கிறது. ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை தொழில் என்பது பூஜை. இன்று முதல் ஜியோ இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமாகிறது” என்று குறிப்பிட்டு உரையை தொடங்கினார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு, சோர்வாட் என்ற கிராமத்தில் ஒரு சாதாரண வீட்டில் இந்த கனவு தொடங்கியது. பணமோ, எந்தப் பின்னணியோ இல்லாமல் ஏடன் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்தவர்தான் எங்கள் தாத்தா தீருபாய் அம்பானி. ஒரு சாதாரண மனிதனாலும் பெரிய கனவுகளைக் காண முடியும் என்பதை அவர் நிரூபித்தார். அவருக்குப் பிறகு, ‘இந்தியா உலகளவில் எதிலும் பின்தங்கக் கூடாது’ என்று எங்கள் தந்தை கனவு கண்டார். ஜாம்நகரின் வறண்ட நிலத்தில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டினார்.
அதன்பின்னர் வந்த புதிய இந்தியாவில் ஒரு புதிய கனவு பிறந்தது – “இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் இணையம் (இன்டர்நெட்) இருக்க வேண்டும், ஒவ்வொரு கிராமத்திற்கும் உலகம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும். அந்த கனவின் பெயர்தான் ஜியோ.” என்றார் அனந்த் அம்பானி.
“எனது சகோதரி இஷா ‘ஜியோ’ என்கிற கனவுக்கான விதையைப் போட்டார். சகோதரர் ஆகாஷ் அதைத் தன் சொந்தக் கனவாக மாற்றி ஜியோவை வளர்த்தார். கொரோனா காலத்தில் உலகமே முடங்கியபோது, பள்ளிகள் மூடப்பட்டாலும் குழந்தைகள் படிப்பு நிற்கவில்லை. ஊரை விட்டு வெளியூருக்கு வேலைக்குச் சென்ற மகன், வீடியோ காலில் பார்த்துத் தன் தாயிடம் பேச முடிந்தது. வீட்டிலிருந்தபடியே அனைவரும் இறைவனைத் தரிசிக்க முடிந்தது. ஒரு சிறிய ஊரில் போனை வைத்துக்கொண்டு பேசத் தொடங்கிய சாதாரணப் பெண், இன்று லட்சக்கணக்கான மக்கள் ரசிக்கும் ‘இன்ஃப்ளூயன்சராக’ மாறியிருக்கிறார்.
எல்லையில் காவல் காக்கும் ஒரு ராணுவ வீரர், தன் தாயிடமும் மகளிடமும் வீடியோ காலில் ‘நான் நல்லா இருக்கேன்’ என்று பேச முடிகிறது. மும்பையில் இருக்கும் ஒரு பெரிய டாக்டர், ராஜஸ்தான் கிராமத்தில் இருக்கும் ஒரு நோயாளியைக் காப்பாற்ற முடிகிறது. இவர்கள் எல்லோரையும் இணைத்தது ஒன்றுதான் — அது ஜியோ.” என்று நெகிழ்ந்தார்.
“ஜியோ கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்தியா காணும் ஒவ்வொரு டிஜிட்டல் கனவின் இதயத் துடிப்பாக அது இருக்கிறது. ஜியோ மீது நம்பிக்கை வைத்த 53 கோடி ஜியோ குடும்ப உறுப்பினர்களுக்கு, முதற்கண் எங்களது மரியாதையான வணக்கங்கள். ஜியோவை உருவாக்கியது நீங்கள் தான். உங்கள் கனவுகளை நனவாக்குவதுதான் எங்களது கனவு. இன்று இஷா, ஆகாஷ் நானும் மூன்று உடலாக இருந்தாலும், ஒரே மனதோடு ஒரே உறுதியுடன் உங்கள் முன் நிற்கிறோம். ரிலையன்ஸ் தொடர்ந்து புதிய கனவுகளைக் காணும். ஆனால் எனது தாத்தாவின் கனவு, பாட்டியின் ஆசிகள், தந்தையின் வழிகாட்டுதல் மற்றும் தாயாரின் பணிவும் கவனிப்பும் கொண்ட நற்பண்புகள் வழியில் அதன் வேர்கள் என்றும் மாறாது. மழையிலும் வெயிலிலும் செல்போன் கோபுரங்களில் ஏறி வேலை செய்த ஊழியர்கள், பொறியாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் ஜியோ குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!” என்றும் அனந்த் அம்பானி பேசினார்.

