ITR தாக்கல் செய்ய ChatGPT யூஸ் பண்றீங்களா? இதை செஞ்சீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு நோட்டீஸ் வரும்!
தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்னும் 14 நாட்களே இருக்கிறது. இந்த ஆண்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். மீதி நாட்கள் இருக்கிறதே என்று காத்திருக்காமல் முன்கூட்டியே தாக்கல் செய்வது நல்லது.கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் இந்த டெட்லைன் தேதி நீட்டிக்கப்படும் என்றும் நினைக்கின்றனர். ஆனால் இதுவரையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஜூலை 31 நெருங்கி வருவதால் சில வரி செலுத்துபவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதை இன்னும் சிம்பிளாக்க வேண்டும் என்பதற்காக பல வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் வரி கணக்கை தயார் செய்வதற்கு ChatGPT மற்றும் Claude போன்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

உங்களுக்கு வரி தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக சாட்ஜிபிடி போன்ற AI-யிடம் கேட்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் உங்களின் முழுமையான வரி கணக்கையும் சாட் ஜிபிடி மூலம் தயார் செய்வது ஆபத்தில் போய் முடியலாம்.
ஏஐ தயாரித்துக் கொடுக்கும் வரிக்கணக்கை அப்படியே ஈ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவிட்டால் ரூ.5000 வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரலாம். ஒரு சிலருக்கு ரீஃபண்ட் தொகை வராமல் போவதோடு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்புவதற்கும் வாய்ப்பாகலாம்.
நீங்கள் சாட் ஜிபிடி மூலமாக எடுக்கும் வருமான வரி கணக்கை ஈ-ஃபைலிங் இணையதளத்தில் அப்படியே வழங்குவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று நினைக்காதீர்கள். ஏனெனில் நீங்கள் இணையதளத்தில் வழங்கும் டேட்டாவை மட்டும் வரி அதிகாரிகள் பார்ப்பதில்லை. 56-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நீங்கள் செய்யும் பரிவர்த்தனை விபரங்கள், உங்களுக்கு கிடைத்த லாப நஷ்ட விபரங்களை அரசு கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
எனவே நீங்கள் தாக்கல் செய்திருக்கும் கணக்கும் பிற தரவுகளிடமிருந்து பெறப்பட்ட கணக்கும் ஒன்றாக இருக்கிறதா என்பதை சிஸ்டம் உடனடியாக ஒப்பிட்டுப் பார்க்கும். உதாரணமாக வங்கி கணக்கு விவரங்கள், பங்குச்சந்தை லாப நஷ்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் வருமானம், பத்திரப்பதிவு அலுவலகங்கள் என பல இடங்களில் இருந்து உங்களுடைய டேட்டா வருமானவரித்துறையை சென்றுவிடும். இந்த விவரங்கள் அனைத்தும் அனுவல் இன்பர்மஷன் ஸ்டேட்மென்ட் என்று சொல்லப்படுகிற AIS அறிக்கையிலும், படிவம் 26 ஏஎஸ்-யிலும் சேகரிக்கப்படும்.
நீங்கள் தவறு செய்யும் நோக்கத்தில் சாட் ஜிபிடி-யிடம் கேட்கவில்லை என்றாலும் சில நேரங்களில் உங்களுக்கு கிடைத்த வட்டி வருமானம், டிவிடெண்ட் ஆகிவற்றை மறந்திருப்பீர்கள். இதனால் அதை கருத்தில் கொள்ளாமல் AI கணக்கிட்டு வழங்கிவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் வருமானவரித்துறையின் சிஸ்டம், நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆரில் சில பிரச்சினைகள் இருப்பதாக காண்பிக்கும். இதனால் உங்களுக்கு நோட்டீஸ் அல்லது கூடுதல் வரி விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
மேலும் இந்தியாவின் வரிச் சட்டங்களில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும். எனவே AI தளங்கள் உடனடியாக தன்னை அப்டேட் செய்து கொண்டு அதற்கு ஏற்ப டேட்டாவை வழங்கும் என்று சொல்லிவிட முடியாது. சாட் பாட்கள் தற்போதைய நிதியாண்டை கணக்கில் கொள்ளாமல் அதற்கு முந்தைய நிதி ஆண்டை கணக்கில் கொண்டு வரி கணக்கை வழங்கவும் வாய்ப்புள்ளது. இதனால் இறுதியில் உங்களுக்குத்தான் பிரச்சினை ஏற்படும்.
அதேபோல உங்களுடைய பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் வழங்கவில்லை என்றால் AI சாட்பாட்டால் ஒரு வரி நிபுணரை போல செயல்பட முடியாது. வரித் தாக்கல் செய்யும்போது சரியான படிவத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் குறைபாடு இருந்தால் நீங்கள் தாக்கல் செய்த வரி கணக்கு டிஃபெக்டிவ் ரிட்டன் என்று வகைப்படுத்தப்படும். இதனால் அபராதத்துடன் சேர்த்து ஒட்டுமொத்த செயல்முறையும் நீங்கள் முதலில் இருந்து செய்ய வேண்டிய நிலை வரலாம்.
அதேபோல ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு உங்களுடைய அடையாள ஆவணங்களின் விவரங்கள் தேவை. உதாரணமாக பான் கார்டு, ஆதார் கார்டு, அக்கவுண்ட் விவரங்கள் இவை அனைத்தையும்.. அனைவரும் பயன்படுத்தக்கூடிய AI தளங்களில் பதிவிடுவது நீங்களே உங்களுடைய டேட்டாவை மற்றொரு நிறுவனத்திற்கு பதிவேற்றம் செய்வதற்கு சமம். இதனால் அடையாளத் திருட்டு மற்றும் டேட்டா கசிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். வரி தொடர்பான விஷயங்களை புரிந்து கொள்வதற்குக் AI-ஐ பயன்படுத்துங்கள். மற்றபடி ITR தாக்கல் செய்ய ஒரு சிஏ-வின் உதவியை பெறுவது நல்லது.
