Last Updated:
மனிதர்கள் விண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வாழ்விடத்தை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இதற்காக வீரர்களைத் தயார்படுத்தும் வகையில், பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில் மனித விண்வெளி அமைப்பை வடிவமைத்து நிறுவுவதற்கான டெண்டரை, இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த மனித விண்வெளி அமைப்பு எதற்காக வடிவமைக்கப்படுகிறது தெரியுமா?
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் ‘பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்’ (Bharatiya Antariksh Station – BAS) எனப்படும் இந்தியாவின் சொந்த விண்வெளி மையத் திட்டங்களுக்கும் நமது விண்வெளி வீரர்களைத் தகுதியுடையவர்களாக மாற்றுவதே இந்த விண்வெளி அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
நிலா (கோப்புப்படம்)
அதுமட்டுமன்றி விண்வெளியில் நீண்ட காலம் தங்கும்போது விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை செயற்கையாக உருவாக்கி ஆய்வு செய்வதும் இந்த வசதியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த வாழ்விடம் 5 மீட்டர் உயரம் மற்றும் விட்டம் கொண்டது. இதில் நான்கு விண்வெளி வீரர்கள் வரை தங்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை இது ஆய்வு செய்யும். பூமியின் தரைப்பரப்பில் இருந்துகொண்டே விண்வெளியின் சவாலான சூழலைச் செயற்கையாக உருவாக்கி விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சியளிக்க இந்த வாழ்விடம் உதவும்.
மேலும், 60 நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பயணங்களில், கார்பன் டை ஆக்சைடு அளவை மாற்றியமைப்பது, விண்வெளி வீரர்களுக்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு தாமதங்களை உருவகப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட சென்சார்கள் மூலம் நிகழ்நேரக் கண்காணிப்பும் செய்யப்பட உள்ளது.
அத்துடன் விண்வெளியில் மிகக் குறுகிய மற்றும் மூடிய இடத்திற்குள் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது, மனிதர்களின் மனநிலை மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் இதில் நிகழ்நேரத்தில் ஆய்வு செய்வர். விண்வெளியின் சவால்களை எதிர்கொள்ள நமது வீரர்களைத் தயார்படுத்தும் இந்தத் திட்டம், இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


