சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முகமது நபி தொடர்பில் அவமதிப்பானதாகக் கருதப்படும் கருத்தொன்றை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டதாகக் கூறி அனோஜன் கைது செய்யப்பட்டிருந்தார்.
சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம்
முதலில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் திகதி சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையாக தண்டனையை அதிகரித்தது.

இந்நிலையில், கருத்து வெளியிட்டதற்காக ஒருவரை சிறையில் அடைப்பதும், மரண தண்டனை போன்ற தண்டனைக்கு உட்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மாம் சிறைச்சாலைக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகள் சென்று, சக கைதியொருவருடனான மோதலில் அவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறை அதிகாரிகளின் தகவலின்படி, அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றொரு கைதியின் நகங்களால் ஏற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அனோஜன் பின்னர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேவேளை, மரண தண்டனைக்கு எதிராக சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபியா சென்றுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீட்டை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்காக இலங்கை மற்றும் சவூதி சட்ட ஆலோசகர்களுடன் இணைந்து தேவையான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


