Last Updated:
குஜராத் அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அதிக கடினமில்லாத இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்தடுத்து வந்த நிஷாந்த் சிந்து ரன்களும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 19 ரன்களும் எடுத்து நிதானமாக ஆட முயன்றபோதிலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். ஒரு கட்டத்தில் 12.1 ஓவர்களில் 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தத்தளித்தது.
அப்போது களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். பொறுப்புடன் ஆடிய அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த அர்ஷத் கான் 15 ரன்களும், ராகுல் திவேதியா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 7 ரன்களும் எடுத்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் பந்துவீச்சில் ராசிக் சலாம் தார் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அனுபவ வீரர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், கிருணால் பாண்டியா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி குஜராத் அணியை பெரிய ரன்கள் குவிக்க விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து, 2026 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று தங்களது இரண்டாவது கோப்பையைக் கைப்பற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இலக்கை நோக்கி பெங்களூரு அணி தனது இன்னிங்ஸை விளையாடத் தயாராகி வருகிறது.


