Last Updated:
255 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
ஐபிஎல் 2026 தொடரின் 29-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
முல்லன்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கனோலி ஆகியோரின் அதிரடி ஆட்டம் லக்னோ பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது.
பிரியன்ஷ் ஆர்யா வெறும் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 93 ரன்கள் குவித்து சதத்தைத் தவறவிட்டார். அவருக்கு ஈடுகொடுத்த கூப்பர் கனோலி 46 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது.
இதையடுத்து 255 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. மிட்செல் மார்ஷ் 40 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 43 ரன்களும், எய்டன் மார்க்ரம் 42 ரன்களும் எடுத்து ஓரளவுக்குப் போராடிய போதிலும், பஞ்சாப் அணியின் துல்லியமான பந்துவீச்சை அவர்களால் அடித்து ஆடி ரன்கள் சேர்க்க முடியவில்லை.
லக்னோ அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் ஒற்றை இலக்க ரன்னில் (9 ரன்கள்) ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பஞ்சாப் தரப்பில் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால் மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது. அதிரடி பேட்டிங்கால் வியக்க வைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான ஆட்டத்தை வழங்கி வெற்றியைத் தன்வசமாக்கியது.
Apr 19, 2026 11:54 PM IST


