Last Updated:
சிஎஸ்கே அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர்களான பதும் நிசங்கா 19 ரன்களிலும், கே.எல். ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மிடில் ஆர்டரில் நிதிஷ் ராணா, கருண் நாயர் மற்றும் கேப்டன் அக்சர் படேல் ஆகியோரும் பெரிய ஸ்கோர் எடுக்கத் தவறினர். இறுதி கட்டத்தில் சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்கள் எடுத்து ஓரளவு கைகொடுத்தார். சிஎஸ்கே தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
156 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் தூணாக நின்று விளையாடினார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 6 ரன்கள், உர்வில் படேல் 17 ரன்கள் எடுத்து விரைவாக ஆட்டமிழந்தாலும், சஞ்சு சாம்சன் அதிரடியாக ரன்களைக் குவித்தார்.
அவர் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக கார்த்திக் சர்மா 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இவ்விருவரின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அக்சர் படேல் மற்றும் லுங்கி என்கிடி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
May 06, 2026 12:07 AM IST


