தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது.
இந்திய திரையுலகின் மூத்த நடிகரான அனுபம் கெர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் இந்த மகத்தான வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். இந்த அளவிலான வெற்றி ஒருபோதும் தற்செயலாக அமைவதில்லை. இது மக்களின் உறுதி, இணைப்பு மற்றும் நம்பிக்கையின் வெற்றி. அளவற்ற மக்களின் அன்பினால், திரையுலக ஜாம்பவான்கள் தலைவர்களாக உருவெடுக்கும் ஒரு வளமான பாரம்பரியம் தமிழ்நாட்டில் உள்ளது.
மேலும், இந்த தருணம் அந்தப் பாரம்பரியத்தின் ஒரு சக்திவாய்ந்த தொடர்ச்சியாக இருக்கிறது. இத்தகைய மாபெரும் மக்கள் ஆதரவைப் பெற்று, அதை ஒரு ஆணையாக மாற்றியிருப்பது, மக்களுடனான உங்களுடைய பயணத்தையும், பிணைப்பையும் பறைசாற்றுகிறது. மாநிலத்திற்குச் சேவை செய்யவும், தேசத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் உங்களுக்கு வலிமை, ஞானம் மற்றும் படைப்பாற்றல் கிடைக்க வாழ்த்துகிறேன். இந்தப் புதிய அத்தியாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தையும், ஊக்கமளிக்கும் தலைமையையும் கொண்டு வரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.



