Last Updated:
சொந்த மைதானத்தில் சென்னை அணி சந்தித்த இந்தத் தோல்வி ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்குத் தொடக்கம் சற்று அதிர்ச்சிகரமாக அமைந்தது. நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும், உர்வில் படேல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சர்ஃபராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். இருப்பினும், ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று ஆடினார்.
அவர் 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக ஷிவம் துபே 22 ரன்களும், இறுதியில் அதிரடியாக ஆடிய ஜேமி ஓவர்டன் 6 பந்துகளில் 18 ரன்களும் (3 சிக்ஸர்கள்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை காகிசோ ரபாடா சிறப்பாகச் செயல்பட்டு 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் மானவ் சுதார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்குத் தொடக்கமே அதிரடியாக அமைந்தது. தொடக்க வீரர் சாய் சுதர்சன் சிஎஸ்கே பந்துவீச்சைச் சிதறடித்து 46 பந்துகளில் 87 ரன்கள் (4 பவுண்டரி, 7 சிக்ஸர்) குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அவருக்குத் துணையாக கேப்டன் சுப்மன் கில் 33 ரன்களும், ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி 16.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. சென்னை அணி தரப்பில் அகீல் ஹொசைன் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. சொந்த மைதானத்தில் சென்னை அணி சந்தித்த இந்தத் தோல்வி ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.


