Last Updated:
இதுவரை 2 போட்டியில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும், பந்துகளை வீணடித்ததால் அந்த அணி தோல்வியை தழுவியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9-ஆவது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்களும், ஜாஸ் பட்லர் 39 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 38 ரன்களும் எடுத்தனர்.
மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாட தொடங்கினர். அந்த அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
8 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மாவும், 6 ரன்களில் ரிக்கெல்டனும் சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஓரளவு அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். மற்றவர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும், பந்துகளை அவர்கள் வீணடித்ததால் வெற்றி கைநழுவியது.
இதையும் படிங்க – IPL 2025 | 137 கோடி பார்வையாளர்கள்..! புதிய உச்சத்தை எட்டிய ஜியோஹாட்ஸ்டார்
குஜராத் அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதுவரை 2 போட்டியில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.
March 29, 2025 11:52 PM IST


