Last Updated:
2-ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே 31 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்.சி.பி. அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் ஆர்.சி.பி. மற்றும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி. அணி கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் மற்றும் குவின்டன் டீ காக் களமிறங்கினர். குவின்டன் டி காக் 4 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பின்னர் இணைந்த சுனில் நரேன் கேப்டன் அஜிங்கியா ரஹானே அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
இருவரும் 2-ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே 31 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சுனில் நரேன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த அருமையான தொடக்கத்தை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் அங்ரிஷ் ரகுவன்சி மட்டும் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மற்றவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. இதை எடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்.சி.பி. அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
March 22, 2025 9:20 PM IST