Last Updated:
தோனியின் முழங்காலில் தேய்மானம் காரணமாக, 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்பதால், அவர் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்குவதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கமளித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 9ஆம் பேட்ஸ்மேனாக களமிறங்குவது ஏன் என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். 5ஆவது அல்லது 6ஆவது பேட்ஸ்மேனாக வந்து, இறுதி ஓவர்களில் பவுண்டரிகள் விளாசி, பினிஷிங் ரோலை பல ஆண்டுகளாக செய்து வந்தார். ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து பேட்டிங்கில் கீழ் வரிசையில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், பெங்களூரு அணியுடனான போட்டியின்போது, தோனி 9ஆவது வீரராக களமிறங்கியது குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.
13ஆவது ஓவரில் துபே தனது விக்கெட்டை இழந்தபோது, சென்னை அணிக்கு 43 பந்துகளில் 117 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தபோது, அஸ்வின் மைதானத்திற்கு வந்தார். போட்டியின் முக்கிய நேரத்தில் பவுண்டரிகள் நிறைய தேவைப்படும்போது, பினிஷிங் ரோல் செய்யும் தோனி களமிறங்காமல், அஸ்வினை களமிறக்கியது ஏன் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் நேற்றைய ராஜஸ்தான் ஆட்டத்தில் தோனி சீக்கிரமாகவே களமிறங்கினார்.
ஆட்டத்தின் முடிவில் பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், பின்வரிசையில் தோனி களமிறங்குவது குறித்து பேசியுள்ளார். அதில், “தோனியின் உடலும், அவரது முழங்காலும் முன்பு இருந்தது போல் தற்போது இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் இப்போது நன்றாக கால் அசைவு இருக்கிறது. எனினும், முழங்காலில் இன்னும் தேய்மானம் இருக்கிறது. எனவே, அவரால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது. விக்கெட் கீப்பராகவும் செயல்படுவதால், அவரால் 10-12 ஓவர்கள் பேட்டிங் செய்வது சாத்தியமில்லை.
எனவே, அந்த நாளை பொறுத்து எந்த இடத்தில் களமிறங்குவது என்பதை முடிவு செய்கிறார். ஆட்டம் சமநிலையில் இருந்தால் சீக்கிரமாகவே களமிறங்குவார். நேற்றும் அப்படித்தான் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் இறங்கினார். தோனி பேட்டிங் செய்ய 13 அல்லது 14வது ஓவருக்குப் பிறகுதான் சரியான நேரம். அதுவும் சூழ்நிலையைப் பொறுத்து அமையும்.
கடந்த ஆண்டு நான் சொன்னது போலவே, சிஎஸ்கேவுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் தோனி. அவர் தற்போதும், தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் என சிறந்து விளங்குகிறார். அவரால் 10 ஓவர்கள் நின்று பேட்டிங் ஆட முடியாது. ஆனால், போட்டியின் தன்மை பொறுத்து 13 -14 ஓவர்களில் யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தோனி விளையாட விரும்புகிறார்” என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு தோனி முழங்காலில் சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 31, 2025 12:43 PM IST


