Last Updated:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். டெவால்ட் ப்ரூவிஸ் 23 பந்துகளில் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் 57 ரன்கள் சேர்த்தார்.
ஆயுஷ் மாத்ரே 34 ரன்களும், உர்வில் படேல் 37 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 21 ரன்களும் எடுத்தனர். தோனி இன்றைக்கு பேட்டிங் செய்யாதது சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியால் 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
231 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் கில் 13 ரன்னிலும், ஜாஸ் பட்லர் 5 ரன்னிலும், ஷெர்பேன் ரூதர்போர்டு ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
தமிழக வீரர் ஷாரூக்கான் 2 சிக்சர்களுடன் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களில் ராகுல் டெவாட்டியா 14 ரன்னும், ரஷித் கான் 12 ரன்னும், அர்ஷத் கான் 20 ரன்களும் எடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நடப்பு சீசனில் தனது கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது சென்னை அணி.


