Last Updated:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனை விவசாயி தினகராஜ், பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக பனைமரங்களில் நிரந்தர படிக்கட்டுகளை அமைத்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அடி முதல் நுனி வரை அனைத்துப் பகுதிகளும் மனிதர்களுக்கு பயன் தருவதால், பனைமரம் சிறந்த மரமாகப் போற்றப்படுகிறது. இந்தியாவில் அதிகளவில் பனைமரங்கள் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அதிலும், தூத்துக்குடி மாவட்டம் பனை வளம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.
காலப்போக்கில் பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால், பாரம்பரிய பனைத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த பனை விவசாயி தினகராஜ், பனைத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பனைமரங்களில் நிரந்தர படிக்கட்டுகளை அமைத்து புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக பனைத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வருகிறது. என் தாத்தா, அவரது தந்தை, என் தந்தை என அனைவரும் பனைமரம் ஏறி பதநீர் இறக்குதல், கருப்பட்டி தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டவர்கள். ஒரு காலத்தில் எங்கள் கிராமத்தில் ஏராளமானோர் பனைமரம் ஏறி இந்தத் தொழிலைச் செய்து வந்தனர். தற்போது ஓரிருவர் மட்டுமே இந்தத் தொழிலில் உள்ளனர். கடந்த ஆண்டு வரை என் தந்தை பனைமரம் ஏறி கருப்பட்டி உற்பத்தி செய்து வந்தார். அவருக்குப் பிறகு பனைமரம் ஏற யாரும் இல்லாத நிலை ஏற்பட்டதால், தொழிலைத் தொடர முடியாத சூழல் உருவானது.
பனைமரங்களில் நிரந்தர படிக்கட்டு அமைத்து அசத்தும் தூத்துக்குடி விவசாயி
அப்போது பனைமரங்களைப் பாதுகாத்து, இந்தத் தொழிலை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பனைமரங்களில் நிரந்தர படிக்கட்டுகளை அமைக்கும் யோசனை தோன்றியது. இதற்காக சுமார் ரூ.60 ஆயிரம் முதலீடு செய்துள்ளேன். ஆரம்பத்தில் செலவு அதிகமாகத் தோன்றினாலும், ஒரு பனைமரம் அதன் வாழ்நாளில் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டித் தரும் என்பதால், இது லாபகரமான முதலீடாக இருக்கும்.
இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதால், தோட்டத்தில் உள்ள அனைத்து பனைமரங்களிலும் படிக்கட்டுகளை அமைத்து, மீண்டும் முழு வீச்சில் பனைத் தொழிலைத் தொடர திட்டமிட்டுள்ளேன். பனைமரம் ஏறுவதில் உள்ள சிரமமும், தொழிலாளர்கள் பற்றாக்குறையும் தான் இந்தத் தொழில் நலிவடைய முக்கிய காரணமாக உள்ளது. படிக்கட்டுகள் அமைப்பதன் மூலம் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.
பனைத் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதுமையான முயற்சி, பனை விவசாயிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசு உரிய ஊக்கமும் ஆதரவும் வழங்கினால், மறைந்து வரும் பாரம்பரிய பனைத் தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Jul 07, 2026 10:36 AM IST

