அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள ட்ரம்ப் அரசின் இரண்டு முக்கிய ஆளுமைகளிடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
அரசு செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக இருக்கும் எலான் மஸ்க் மற்றும் வெளியுறவுத்துறை செயளால மார்கோ ரூபியோ ட்ரம்ப் முன்னிலையில் காரசாரமான உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

மார்கோ ரூபியோவுக்கு பாராட்டு!
ஏற்கெனவே எலான் மஸ்க் அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவனத்தை மூடியபோது அவர் மீது விமர்சனம் வைத்திருந்தார் ரூபியோ.
இதனால், 20 கேபினெட் உறுப்பினர்களுடன் ட்ரம்ப் இருந்த அறையில் வெளிப்படையாக ரூபியோ தனது மனக் குறைகளைத் தெரிவித்துள்ளார்.
அவர், முன்கூட்டியே ஓய்வு பெற்ற 1,500 வெளியுறவுத்துறை அதிகாரிகளை மஸ்க் கருத்தில் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டி நகைச்சுவையாக, இவர்களை மீண்டும் பணியமர்த்தி வேலையை விட்டு நீக்குவது போன்ற நாடகம் நடைபெறுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எலான் மஸ்க், `ரூபியோ போதுமான அளவில் ஆள்களை பணிநீக்கம் செய்யவில்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு இடையிலான விவாதத்தில் தலையிட்ட ட்ரம்ப், தனது பயணங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியதற்காக ரூபியோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Elon Musk அதிகாரம் குறைப்பு!
அரசு செயல்திறன் துறையில் எலான் மஸ்கின் அவசரகதியான அணுகுமுறையுடன் பல கேபினெட் உறுப்பினர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம் என நியூ யார்க் டைம்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

உதாரணமாக அமெரிக்காவில் விமான விபத்துகள் பேச்சுபொருளாக இருக்கும் தருவாயில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை பணிநீக்கம் செய்ய DOGE முயற்சிப்பது குறித்து போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் எலான் மஸ்க் சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை நோக்கில் வேலைக்கு சேர்க்கப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு கோபுரங்களில் வேலை செய்வதாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், துறைசார்ந்த முடிவுகளை செயலாளர்களே எடுப்பார்கள் என்றும் எலான் மஸ்க் வழிநடத்தும் அரசு செயல்திறன் துறை ஆலோசனைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இதனால் பதவியேற்றது முதல் எலான் மஸ்கின் வசம் இருந்த கட்டற்ற அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்குப் பிறகான எக்ஸ் தள பதிவில் டொனால்ட் ட்ரம்ப், `அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் தொடரும்’ எனக் கூறியுள்ளார். இதனால் எலான் மஸ்க் அவரது பணிகளை செம்மைப்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க், `இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது’ என்று கூறியுள்ளார்.
சந்திப்பின் இறுதியில் எலான் மற்றும் மார்கோ இருவரையும் பாராட்டியுள்ளார் ட்ரம்ப்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
