Last Updated:
நடப்பு சீசனை வெற்றியுடன் தொடரைத் தொடங்க மும்பை அணி தீவிரம் காட்டும் என்பதால் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி மிகுந்த விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியுடன் மும்பை மோதும் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23 அன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஒரு போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சீசனில் அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாகப் பந்து வீசியது. தொடர்ந்து மூன்று முறை இதே தவறை மும்பை அணி செய்ததால் அதன் கேப்டன் ஒரு போட்டியில் விளையாடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதன் காரணமாக நடப்பு சீசனின் முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா விளையாடாத சூழலில் அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் ரோஹித் சர்மாவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவர் கேப்டன்ஷிப் செய்யக்கூடிய கடைசி போட்டியாக இது அமையலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய ஆட்டக்காரர்களை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளதால் இந்த சீசனில் மற்ற அணிகளுக்கு மும்பை கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளேயிங் லெவனை பொறுத்தளவில் ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட் மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோர் இடம்பெறலாம்.
இதையும் படிங்க – சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா? அடுத்த கேப்டன் யார்?
நடப்பு சீசனை வெற்றியுடன் தொடரைத் தொடங்க மும்பை அணி தீவிரம் காட்டும் என்பதால் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி மிகுந்த விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
March 08, 2025 8:55 PM IST


