பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் நடந்த யாத்திரையை, இண்டியா கூட்டணி கட்சிகள் பிரசார மேடையாக பயன்படுத்தி, பா.ஜ., மற்றும் பீஹார் முதல்வரை சரமாரியாக விமர்சித்தன.
பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், அவருடைய மகனுமான தேஜஸ்வி யாதவ், ஜன் விஸ்வாஸ் மகா யாத்திரை என்ற பெயரில், மக்களின நம்பிக்கையைப் பெறும் யாத்திரையை துவக்கிஉள்ளார்.
இதற்காக, பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மத்திய பிரதேசத்தில் இருந்து, விமானத்தில் வந்தார்.
இந்த யாத்திரை துவக்க விழாவில், லாலு பிரசாத், தேஜஸ்வி, ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
”மத்தியில் ஆளும் பா.ஜ., இரண்டு அல்லது மூன்று பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது. ஆனால், மக்கள் தொகையில், 73 சதவீதம் உள்ள, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து கவலைப்படுவதில்லை,” என, ராகுல் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேஜஸ்வியை நோக்கி, ”நீங்கள் மாமா என்று மரியாதையாக அழைக்கும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார், மீண்டும் கூட்டணி மாறியுள்ளார். அதை அவர் மீண்டும் செய்வார். அதனால் அவரை ஏற்றுக் கொள்ளாதீர்கள்,” என்று பேசினார்.
”விரைவில் நடக்க உள்ள தேர்தலில், மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்,” என, லாலு பிரசாத் யாதவ் பேசினார்.
முன்னதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்