Last Updated:
Delhi Election 2025 | டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதால், ஆம் ஆத்மி கட்சி 43% வாக்குகளுடன் தோல்வியடைந்தது. பாஜக 45.5% வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டதே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்ததற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 45.5 விழுக்காடு வாக்குகள் பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி 43 விழுக்காடு வாக்குகளும், காங்கிரஸ் ஆறு விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளன.
‘இந்தியா’ கூட்டணியின் வாக்குகள் சிதறியதால் டெல்லியில் பாஜக எளிதாக வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக-விடம் தோற்றனர். அதே நேரத்தில் அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றதால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சவுரப் பரத்வாஜ், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த சோமநாத் பாரதி உட்பட 11 பேரின் வெற்றியை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நியூ டெல்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார். தோல்விக்கான வாக்கு வித்தியாசம் 4,089. முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனான காங்கிரசின் சந்தீப் தீட்சித் இதே தொகுதியில் 4,568 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். எனவே, ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இந்தத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால் கெஜ்ரிவால் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
மணீஷ் சிசோடியா, பாஜகவின் தர்விந்தர் சிங் மர்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் போட்டியிட்ட ஜங்புரா தொகுதியில் காங்கிரசின் ஃபர்ஹாத் சூரியுக்கு 7,350 வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi
February 09, 2025 8:08 AM IST


