Last Updated:
இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக், சீனியர் பேட்டர் விராட் கோலியின் உடல் தகுதி குறித்து ஒரு முக்கிய, நேர்மறையான புதுப்பிப்பை வழங்கியுள்ளார்.
இன்று கட்டாக்கில் உள்ள பார்பதி மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முழங்கால் பிரச்சினை காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாமல் விராட் கோலி விளையாடவில்லை. கோலியின் உடல்நிலை குறித்து பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் கூறுகையில், “விராட் கோலி விளையாடுவதற்கு முழு தகுதி பெற்றுள்ளார். அவர் பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராக உள்ளார்” என்று தெரிவித்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கோலிக்கு இல்லாத நிலையில், அறிமுக வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது வீரராக களமிறங்கி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் யார் விளையாடுவார்கள் என்பது குறித்து கோட்டக் எதுவும் குறிப்பிடவில்லை. “அது தலைமை பயிற்சியாளரும் கேப்டனும் முடிவு செய்ய வேண்டிய விஷயம்” என்று அவர் கூறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், கோலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே தான் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனத் தெரிவித்திருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடியிருக்காவிட்டால், ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவே களமிறங்கியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் இந்திய நடுவர்
இன்றைய போட்டியில் விராட் கோலி விளையாடினால், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கே.எல்.ராகுல் ஆகியோரில் ஒருவர் தான் விளையாட முடியும். அப்படியில்லையென்றால், ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுத்து, இருவரும் களம் காணலாம். ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டாலும், இந்த போட்டியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தான் கூறப்படுகிறது.
February 09, 2025 8:57 AM IST


