வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா :பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஒரு மாதத்துக்கு முன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்து, மீண்டும் பா.ஜ.,வில் நிதீஷ் குமார் இணைந்தார்.
பீஹாரில், தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், முதன்முறையாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வந்தார். பாட்னாவின் பாலிகஞ்ச் என்ற இடத்தில், பா.ஜ., – ஓ.பி.சி., பிரிவு சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
லாலு பிரசாத் போன்றோர், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை. அவர்கள் செய்வது எல்லாம், ஏழை மக்களிடம் இருந்து நிலத்தை அபகரிப்பது தான். அனைத்து நில மாபியா கும்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். பீஹாரில் மீண்டும் இரட்டை இன்ஜின் அரசு அமைந்துள்ளது.
நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, மாநில அரசால் ஒரு விசாரணை குழு அமைக்கப்படும். இக்குழு பரிந்துரைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர்கள், தங்களின் குடும்ப நலனுக்காகவே பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஏழைகளுக்கு அவர்கள் செய்தது என்ன? ஏழைகளுக்கு யாராவது நல்லது செய்ய முடியும் என்றால், அது பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement