Last Updated:
Champions Trophy | பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தும் நிலையில், இந்திய அணி அங்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியாவே வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.
8 அணிகள், 59 கோடி ரூபாய் பரிசுத் தொகை என களைகட்ட உள்ளது மினி உலகக்கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை (19-ஆம் தேதி) தொடங்கி மார்ச் மாதம் 9-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தும் நிலையில், இந்திய அணி அங்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன.
கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் டிராபியை இந்திய அணியே வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருப்பார் எனவும் கிளார்க் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா சமீபத்தில் ஃபார்முக்கு திரும்பி இருப்பதால் அதிரடி காட்டுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி சமீபத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பந்துவீச்சாளராக ஜோஃப்ரா ஆர்ச்சர் இருப்பார் என கிளார்க் தெரிவித்துள்ளார். சிறந்த ஃபார்மில் இருக்கும் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார் என்றும், சிறந்த ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் வெளிப்படுத்தி வருவதாகவும் எனவும் கிளார்க் ஆருடம் கூறியுள்ளார்.
Chennai,Tamil Nadu
February 18, 2025 8:07 AM IST