காலத்தின் மாற்றத்தால் தொழில் இயந்திரமயமாக மாறியிருந்தாலும், அதன் பாரம்பரிய அடையாளமும் தொழிலாளர்களின் கைதிறனும் இன்னும் மங்காமல் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. தூத்துக்குடியில் சிறிய நாட்டுப்படகுகள் மட்டுமல்லாமல், பெரிய அளவிலான சரக்கு போக்குவரத்து செய்லிங் வெசல்கள் மற்றும் பார்ஜ்களும் தயாரிக்கப்படுகின்றன. ஒரு தோணி அல்லது பெரிய வெசல் அமைப்பதற்கு அதன் அளவைப் பொறுத்து ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தொழிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் அந்தோணிப்பா கூறுகையில், “சிறிய வலைப்படகுகளில் தொடங்கிய எங்கள் பயணம், இன்று பெரிய செய்லிங் வெசல்கள் தயாரிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. கடலை நம்பி வாழும் மீனவர்களின் அனுபவமும் உழைப்பும் தான் இந்த தொழிலை இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது” என்றார்.
மேலும், ஒரு பெரிய செய்லிங் வெசல் அல்லது தோணி தயாரிக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ஆகும் என்றும், தேவையான பொருட்கள் சரியான நேரத்தில் கிடைத்தால் வேலையை விரைவாக முடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் ஆயினி மரங்களின் விலை அதிகரித்துள்ளதால், புதிய தோணிகள் அமைப்பது தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.
தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் இந்த செய்லிங் வெசல்கள் இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் துபாய் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் வரை கூட பாய்மரக் கப்பல்கள் பயணம் செய்ததாக மூத்த தொழிலாளர்கள் நினைவுகூருகின்றனர்.
முன்னொரு காலத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட செய்லிங் வெசல்கள் இயங்கிய நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 30 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாரம்பரிய தொழிலை பாதுகாக்க அரசு மானியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர் தாஸ் கூறுகையில், “கடலில் கற்கள் ஏற்றிச் செல்லும் பார்ஜ்களின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு பிளேட்கள் காலப்போக்கில் தேய்ந்து விடுகின்றன. அவற்றை மாற்றி புதுப்பிக்கும் பணிகளும் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பார்ஜ்களின் கீழ்பகுதியில் ஓட்டை ஏற்பட்டால் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி பழைய பிளேட்கள் மாற்றப்பட்டு மீண்டும் கடலுக்கு அனுப்பப்படுகின்றன” என்றார்.
மேலும், தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு பெரிய அளவிலான கற்கள் இந்த பார்ஜ்கள் மூலம் அனுப்பப்படுவதாகவும், கல்கத்தா உள்ளிட்ட பல துறைமுகங்களுக்கும் இவை இயக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பார்ஜ்கள் தனியாக இயங்காமல், டக் படகுகள் மூலம் இழுத்துச் செல்லப்படுகின்றன. கல் குவாரிகளில் இருந்து ஏற்றப்படும் கற்கள், இந்த பார்ஜ்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் நவீன கடல் போக்குவரத்தையும் இணைத்து நிற்கும் தூத்துக்குடி படகு தயாரிப்பு தொழில், இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் கடல் வணிக வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. கடலோடு இணைந்த இந்த பாரம்பரிய தொழில் பாதுகாக்கப்பட்டால், அது ஒரு தொழிலை மட்டுமல்ல, தலைமுறைகள் கடந்து வந்த கலாச்சாரத்தையும் காப்பாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

