கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அரசு ஊழியர் நூர்ஹஸ்வானி இப்ராஹிமின் மரணத்திற்கு, குடும்பத் தகராறே காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் (AKPS) அதிகாரியான 35 வயதுடைய நூர்ஹஸ்வானி, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
சிலாங்கூர், செப்பாங்கில் உள்ள பண்டார் பாரு சலாக் திங்கி காவல் நிலையத்தில், உள்ளூர் நபர் ஒருவர் சரணடைந்ததாகவும், நிலாயில் உள்ள பொதுக் குடியிருப்பு வளாகம் ஒன்றில் தனது மனைவி இறந்து கிடப்பதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் நீலாய் காவல்துறைக்கு இரவு 9.30 மணியளவில் தகவல் கிடைத்தது. காவல்துறைக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நிலாய் சுகாதார கிளினிக்கைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்று அவர் கூறியதாக ‘பெரித்தா ஹாரியான்’ செய்தி ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆயுதம் மற்றும் பிற பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. சந்தேக நபர் அக்டோபர் 22-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். முன்னதாக சுங்கத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய நூர்ஹஸ்வானி, ஜூலை 1ஆம் தேதி முதல் AKPS-க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்று அல்சாஃப்னி தெரிவித்தார்.



