அதிலும், அவரது குடும்பத்தினரே அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, அவரது தாயார் அவரது இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், உள்ளாடைத் தொழில் மீது அவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருந்தது. இருப்பினும், அவரது விடாமுயற்சி, தாயாரை சம்மதிக்க வைத்து உள்ளாடை நிறுவனத்தை நிறுவவும், சாதிக்கவும் வழிவகுத்தது.
அந்த வகையில், பிரபல உள்ளாடை பிராண்டான ஜிவாமேவின் நிறுவனரான ரிச்சா கர், உள்ளாடை தயாரிப்பில் ஒரு குறிக்கோளைக் கொண்டிருந்தார். அதாவது, வசதியான மற்றும் அதிகாரமளிக்கும் அனுபவத்தை உருவாக்கி, ஆன்லைன் தளத்தின் மூலம் பெண்களுக்கு பரந்த அளவிலான உள்ளாடைகளை வழங்குவதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது. இந்த யோசனை ஜிவாமேவை உருவாக்க வழிவகுத்தது, இது பெண்களுக்கான உள்ளாடை சந்தையில் ஒரு முக்கியப் போட்டியாளராக மாற காரணமானது மற்றும் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.764 கோடிக்கு மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் குழுவில் ரிச்சா தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும், அவரது நிகர மதிப்பு ரூ.749 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ரிச்சா, 1980ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் பிறந்தார், பிட்ஸ் பிலானியில் பட்டம் பெற்றார், மேலும் 2007ஆம் ஆண்டு நர்சி மோஞ்சி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (NMIMS) தனது எம்.பி.ஏ-வை முடித்தார். சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கு முன்பு சேப் (SAP) மற்றும் ஸ்பென்சர் போன்ற நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்றார். போதுமான தனிப்பட்ட சேமிப்பு இல்லாத நிலையில், ஜிவாமேவைத் தொடங்க ரிச்சா, தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.35 லட்சத்தை திரட்டினார். சேப் (SAP)இல் இருந்தபோது அவர் விக்டோரியாஸ் சீக்ரெட் போன்ற பிராண்டுகளின் ஆன்லைன் விற்பனை உத்திகளை பகுப்பாய்வு செய்திருந்தார். இது இந்தியாவில் ஜிவாமேயின் திறனை நிரூபிக்க உதவியது.
ஆனால், ரிச்சாவின் வெற்றிப் பயணம் நேரடியானதல்ல. உள்ளாடை பிராண்டைத் தொடங்குவதற்கான அவரது பயணம் சீராக இல்லை. ஆரம்பத்தில் அவர் தனது குடும்பத்தினரிடமிருந்து, குறிப்பாக அவரது தாயிடமிருந்தே விமர்சனங்களை எதிர்கொண்டார். ஏனெனில், உள்ளாடை தொழில் மீது அவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருந்தது. இருப்பினும், அவரது விடாமுயற்சியால் தனது தாயாரை சம்மதிக்க வைத்து உள்ளாடை நிறுவனத்தை நிறுவ காரணமானது. அதேபோல், ரிச்சாவின் நண்பர்களும் அவளுடைய உள்ளாடை பிராண்ட் மீது நம்பிக்கையுடன் இல்லை. இருப்பினும், ரிச்சாவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஜிவாமேவை நிறுவி வெற்றிக்கு வித்திட்டது.
பெண்களுக்கு உள்ளாடைகளைப் பற்றி கற்பிப்பதும், அவர்களின் உடல் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய உதவுவதும் ரிச்சாவின் நோக்கத்தின் முக்கிய பகுதியாகும். 5,000க்கும் மேற்பட்ட பாணிகள், 50 பிராண்டுகள் மற்றும் 100 அளவுகள் என பரந்த அளவிலான தேவைகளைப் பூர்த்தி செய்யும் விரிவான தேர்வை வழங்குவதன் மூலம் ஜிவாமே விரைவாக பிரபலமடைந்தது. பின்னர் நிறுவனம், பெண்களுக்கான ஆடைகள், விளையாட்டு உடைகள் மற்றும் இரவு நேரம் அணியும் உடைகள் என ஆடைகளின் பிரிவை விரிவாக்கியது. 2011ஆம் ஆண்டில், டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் வாடிக்கையாளர்களை சென்றடையும் விதமாக, ரிச்சா ஜிவாமே ஸ்டுடியோவையும் தொடங்கினார்.
எகனாமிக் டைம்ஸ் கருத்துக் கணிப்பில் “சிறந்த பெண் தொழில்முனைவோர்” என்ற பட்டத்தையும், 2014ஆம் ஆண்டில் ஃபார்ச்சூன் இந்தியாவின் 40 வயதுக்கு உட்பட்ட 40 பேர் கொண்ட பட்டியலில் ஒரு இடத்தையும் பிடித்தார். ஆனால், 2020ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ஜிவாமே நிறுவனத்தை வாங்கியது. இருப்பினும், ரிச்சா நிறுவனத்தில் தனது பங்குகளைத் தக்க வைத்துக் கொண்டார். ரிச்சா, காம்ஸ்கோரின் துணைத் தலைவரான கேதர் கவானேவை மணந்தார்.

