Last Updated:
நண்பர்களுடன் சேர்ந்து பூனைக்கு தீ வைத்த பெண்… வெளியான அதிர்ச்சி வீடியோவால் பரபரப்பு..
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சமீபத்தில் ஒரு பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து பூனை ஒன்றை தீ வைத்து எரித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வெளியான ஒரு வீடியோவில், சிலர் ஒரு பூனையை அடித்து, பின்னர் உயிருடன் தீ வைத்த சம்பவம் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பிட்ட பூனை ஒன்று மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் அவர்களின் நண்பர்களோடு சென்று கொண்டுருந்த போது வழியில் குறுக்கே வந்ததால் இந்த காரியத்தை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
என்ன நடந்தது.?
குற்றம்சாட்டப்பட்ட பெண்ணும் அவளுடைய தோழிகளும் பைக்கில் எங்கோ சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் ஒரு காட்டுப் பூனை சாலையைக் கடந்தது. இது அந்தப் பெண்ணை மிகவும் கோபப்படுத்தியது. இதனை தொடர்ந்து அந்த பூனையை பிடித்த கும்பல், முதலில் கொடூரமாக அடித்து கொடுமைப்படுத்தி உள்ளது. இதுவும் வைரல் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. வீடியோவில், ஒரு பைக்கின் அருகே நிற்கும் சிலர் குறிப்பிட்ட காட்டுப் பூனையைப் பிடித்து அடிப்பதையும், பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் பூனை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த பதைபதைக்கும் சம்பவம் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது.
போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியின் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்திற்கு இது தொடர்பாக இ-மெயிலில் ஒரு புகார் மற்றும் வீடியோ கிடைத்ததாகவும், இதனை முகாந்திரமாக வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் எஸ்பி தேஹத் குன்வர் ஆகாஷ் சிங் தெரிவித்தார். இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார். வன அதிகாரி கௌரவ் குமார் அளித்த புகாரின் பேரில், பைசுல்லாகஞ்ச் பகுதியில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
FIR-ன் படி, குறிப்பிட்ட பெண்ணும் அவரது நண்பர்களும் காட்டு பூனை ஒன்றுக்கு உயிரோடு தீ வைத்து அதை ஒரு வீடியோவாகவும் ரெக்கார்ட் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 1972-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகள் 9, 39 மற்றும் 51-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதையும் படிங்க: மின்னும் உடை.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ஜான்வி கபூரின் ஹாட் கிளிக்ஸ் வைரல்..!!
இதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஓட்டிச் சென்ற பைக்கை அதன் பதிவு எண் மூலம் போஜ்பூரைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் போலீசார் மும்முரமாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
March 15, 2025 9:53 AM IST
பைக்கில் சென்ற போது குறுக்கே கடந்த பூனை.. அடித்து தீ வைத்து கொளுத்திய பெண் மற்றும் நண்பர்கள்.. அதிர்ச்சி வீடியோ!