உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்றது. அதில் நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தின்போது பிரேசில் அணியின் பிரபல நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மார் பலத்த காயமடைந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.
காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவரை ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இல்லாத நிலையில் பிரேசில் அணி 2-0 என தோல்வியடைந்தது. நெய்மார் காயமடைந்தது பிரேசில் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இது குறித்து அப்போது அணியின் கேப்டன் கேகேமிரோ கூறியதாவது:- “அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.
ஆனால் அவர் காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பும்போது மீண்டும் காயமடைகிறார்” என்றும் கேப்டன் கேசேமிரோ கூறினார்.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணியானது வருகிற 20-ந்தேதி கொலம்பியாவையும், 25-ந்தேதி நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவையும் சந்திக்கிறது.
இதற்கிடையில் இவ்விரு தகுதி சுற்றுக்கான பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் 33 வயதான நெய்மார் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரின் இடதுகால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்ட நெய்மார் 1½ ஆண்டுக்கு பிறகு பிரேசில் அணிக்கு திரும்பியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.