புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை குறைந்த விலைக்கு வழங்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024 மீதான விவாதம் மக்களவையில் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. உறுப்பினர்கள் முன்வைத்த வாதங்களுக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிலளித்தார். அப்போது அவர், “இந்தியா தற்போது 39 நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்கிறது. விநியோகத்தைப் பொறுத்தவரை, கயானா, சுரினாம் மற்றும் பிரேசிலில் இருந்து விநியோகம் அதிகரித்துள்ளது. விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை. மலிவான மூலங்களிலிருந்து எரிபொருட்களை நாங்கள் தொடர்ந்து வாங்கி வருகிறோம். இவ்வாறே தொடர்ந்து வாங்குவோம்.
கடந்த மூன்று ஆண்டுளைப் பொறுத்தவரை, குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வழங்கும் ஒரே நாடு இந்தியாதான். மத்திய கலால் வரியை பிரதமர் மோடி இரண்டு முறை குறைத்தார். அதேநேரத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை அதிகரித்துவிட்டன.
நிலையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்குடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. இது உயிரி எரிபொருட்களுக்கு மட்டும் என்றில்லாமல், உயிரி எரிவாயு மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கும் நீட்டிக்கப்படும். இத்துறையில், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, புதிய ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பது உட்பட அனைத்திலும் நாம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம். இவ்விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறை, ஒரு முழுமையான அணுகுமுறையாக இருக்கிறது” என தெரிவித்தார்.