விவசாயிகள் வழக்கமான அரிசி சாகுபடிக்கு பதிலாக தானியங்களை பயிரிடும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரிசியின் பொருளாதார நம்பகத்தன்மைக்காக உள்நாட்டு விவசாயிகள் அதனை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்தியாவின் அரிசி உற்பத்தியில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
இருப்பினும், தற்போதைய காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழைப்பொழிவு ஆகியவை அரிசி உற்பத்தியை பெரிதும் பாதிக்கக்கூடிய அம்சங்களாக மாறியுள்ளன. இதனால், உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரிசிக்கு பதிலாக, திணை, மக்காச்சோளம், கம்பு போன்ற தானியங்களை பயிரிட்டால் அது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் 11 சதவீத இழப்பை ஈடுசெய்ய உதவும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
அரிசிக்காக ஒதுக்கப்பட்ட அறுவடைப்பகுதிகளை குறைப்பதன் மூலமும், மாற்று தானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை அதிகரிப்பதன் மூலமும் விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்க முடியும். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.