Last Updated:
விராட் கோலி, கே.எல்.ராகுல், வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மினி உலகக்கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பையின் தொடரில் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆக அணிகள் பிரிக்கப்பட்டன. குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி சுற்றில், இந்தியா, ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. விராட் கோலி, கே.எல்.ராகுல், வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி, இந்திய அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. அதே போல நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா போட்டியில், நியூசிலாந்து அணி வீரர்களான ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஆகியோர் அபாரமாக சதமடித்து இமாலய ஸ்கோரை நிர்ணயித்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில், டேவிட் மில்லர் சதமடித்தாலும், அந்த சிறப்பான ஆட்டம் வீணானது.
இந்த நிலையில், வரும் மார்ச் 9ஆம் தேதி, துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இறுதிப்போட்டியில், இந்திய அணி ஏதேனும் மாற்றம் செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், “இந்திய அணி இன்னும் சில இடங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.
இதையும் படிக்க: சச்சின், தோனி, யுவராஜ் சிங்கிற்கு பிசிசிஐ வழங்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?
மேலும் முதல் 10 ஓவர்களில் புதிய பந்தில் வீசும்போது விக்கெட்டுகள் எடுப்பதும் அவசியம். பேட்டிங் செய்யும்போது, முதல் விக்கெட்டுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறினார்.
மேலும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, ”இந்த அணியே நன்றாக தான் உள்ளது. 4 ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். இந்த வெற்றிக்கூட்டணி மாற்றப்படாமல் தொடர வேண்டும்” என்று தெரிவித்தார்.
March 07, 2025 11:56 AM IST


