Last Updated:
10 அம்சங்கள் கொண்ட கட்டுப்பாடுகளை பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது.
குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட விவகாரங்களில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த கட்டுப்பாடுகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் ஆனது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்தது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதையடுத்து 10 அம்சங்கள் கொண்ட கட்டுப்பாடுகளை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அதன்படி, 45 நாட்களுக்கும் குறைவான அளவு கொண்ட வெளிநாட்டுத் தொடர்களின்போது வீரர்கள், குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதேபோல போட்டி மற்றும் பயிற்சிகளின்போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனி வாகனங்களில் பயணம் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. தனி வாகனங்களில் பயணிப்பதற்கான கட்டுப்பாடுகள், நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போதே அமலுக்கு வந்தன.
இதையும் படிக்க: ‘உலகத்தரம் வாய்ந்த பவுலர் அணிக்கு திரும்பியுள்ளார்..’ – பும்ரா குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் துபாய் பயணம், புதிய விதிகள் வகுக்கப்பட்டதற்குப் பின்பான முதல் வெளிநாட்டு பயணமாக அமையவுள்ளது. இந்த வெளிநாட்டுப் பயணத்தில் இந்திய வீரர்களின் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய அணி வீரர்கள் துபாய் செல்லும் நிலையில் ஒரு மாதத்திற்குப் பின் நாடு திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.
February 14, 2025 1:29 PM IST