
Last Updated:
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை வரும் பிப்ரவரி 13ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், கோத்ரா பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்த ரயிலில் இருந்த 59 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிக மோசமான மத கலவரம் ஏற்பட்டது.
இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அதில் விசாரணை நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. மேலும், இதில், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அங்கு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றம், 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் மற்றும் குஜராத் அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை தள்ளி வைக்கக் கோரிக்கை வைத்தனர்.
இதனை கேட்ட நீதிபதிகள், “ஏற்கனவே பல முறை வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 13ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த முறை வழக்கு ஒத்திவைக்கப்படாது” என்று தெரிவித்தனர்.
January 17, 2025 9:24 PM IST

