மின்சாரத் தேவையை முகாமை செய்வதற்காக நாட்டின் 4 வலயங்களில் இன்றைய தினமும் (21) மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒரு மணி நேர மின் விநியோகத் தடையைத் தொடர்ந்து நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் விநியோகத் தடை
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின் விநியோகத் தடை தொடருமா என்பது தொடர்பில் ஊடகம் ஒன்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வினவிய போதே அதன் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் இதுவரை முன்வைக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு, கட்டம் கட்டமாக ஒரு மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

