இந்தியாவுக்கு டிரம்ப் தந்த தீபாவளி பரிசு: இனி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் சிக்கல் இல்லை..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படவிருந்த கடுமையான இறக்குமதி வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இது இந்தியா மற்றும் சீனாவுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தும் போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை தந்து அமெரிக்கா. இதற்காக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த ஆண்டும் 50% இறக்குமதி வரி விதித்து தண்டனை கொடுத்தார் டிரம்ப். இதனால் இந்தியா அமெரிக்கா உறவில் லேசான விரிசல் உண்டானது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என இந்தியாவுக்கு அழுத்தம் தந்து கொண்டே இருந்தார்.

இந்நிலையில் ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் Lindsey O Graham Sanctioning Russia and Iran சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தின் கீழ், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளான இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% வரை சுங்க வரிவிதிக்க டிரம்ப்புக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
இதற்கு 30 நாட்கள் அவகாசம் இருந்த நிலையில் அந்த அவகாசம் முடிவதற்கு முந்தைய நாள் இரவு டிரம்ப் நிர்வாக உத்தரவின் மூலம், இந்த தடைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து தான் டீசலே வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதே இதற்கு காரணம். டிரம்பின் இந்த உத்தரவு அந்த வரிகளை முற்றிலுமாக ரத்து செய்யவில்லை, மாறாக, அவற்றின் அமலாக்கத்தை தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைத்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்த வரிகளை மீண்டும் கொண்டுவரும் அதிகாரத்தை டிரம்ப் தன்னிடம் தக்கவைத்து கொண்டுள்ளார். ஒருவேளை அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது 100% சுங்க வரியை விதித்திருந்தால், அது ஏற்கனவே உள்ள வரிகளுடன் சேர்த்து இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கும். இதனால் அமெரிக்க சந்தையில் இந்திய ருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து, இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. தற்போதைய இந்த விலக்கு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிகமாக பெரிய நிம்மதியை தந்துள்ளது.
மேலும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கவும் வழிவகை செய்துள்ளது. ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ள நிலையில் ரஷ்ய எண்ணெய் தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது. அதற்கு இருந்த நெருக்கடியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

