சுங்கை பூலோ: சுங்கை பூலோவில் நான் எனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளேன்; இங்கு நான் ஒரு சௌகரியமான சூழ்நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பிகேஆர் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பதிலளித்தார்.
இன்று (அக்டோபர் 17) கோத்தா டமன்சாராவில் நடைபெற்ற ‘புரோகிராம் மடானி கித்தா’ (Program Madani Kita) நிகழ்வைத் தொடங்கி வைத்து, அங்குள்ள குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் (town hall) கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கோத்தா டமன்சாரா, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.
என்னைப் பொறுத்தவரை, என்னால் இயன்ற சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளேன், தொடர்ந்து வழங்கியும் வருகிறேன். இன்னும் சிறப்பாகச் செயல்பட தொடர்ந்து முயற்சிப்பேன். இறுதியில், மக்களே முடிவெடுப்பார்கள். இருப்பினும், இன்று நான் கண்டவை மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில், நான் மிகவும் சௌகரியமான சூழ்நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன்.
பிற இடங்களில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டங்களில், சில சமயங்களில் குழப்பமான சூழல் நிலவுவதையோ அல்லது குடியிருப்பாளர்கள் அதிருப்தியில் இருப்பதையோ கேள்விப்படுகிறோம். ஆனால், இங்கு பங்கேற்பாளர்களை நாங்கள் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கவில்லை. கேள்விகளையும் முன்னரே தீர்மானிக்கவில்லை. கிராமத் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர் சங்கப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இதில் பங்கேற்க வரவேற்கப்பட்டனர். நிச்சயமாக, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத சில சிக்கல்கள், குறிப்பாக வடிகால் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சில குடியிருப்பாளர்கள் இன்னும் அதிருப்தியில் உள்ளனர்.
இத்தகைய சிக்கல்களை விரைவில் தீர்க்க நாங்கள் தொடர்ந்து எங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம். இருப்பினும், இன்றைய கூட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, குடியிருப்பாளர்கள் எழுப்புவதற்கு வாய்ப்பு கிடைக்காத, தீர்க்கப்படாத பிரச்சினைகள் மிகக் குறைவு என்றே நான் கருதுகிறேன் என்று ரமணன் கூறினார். மேலும், இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசியவர்கள், சுங்கை பூலோ பகுதியில் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெள்ளத் தடுப்புத் திட்டம் வெற்றி பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக, கோத்தா டமன்சாரா குடியிருப்பாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு ரமணன் பதிலளித்தார். இதில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் முதல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் தொடர்பான விவகாரங்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்றிருந்தன. கடந்த பொதுத் தேர்தலில், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், அம்னோவைச் சேர்ந்த கைரி ஜமாலுதீனுக்கு எதிராக ராமணன் 2,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 158,090 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
The post சுங்கை பூலோவில் நான் “சௌகரியமான சூழ்நிலையில்” இருக்கிறேன்: ரமணன் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

